கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பரதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தற்போது குறுவை அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் தரையில் கொட்டி மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி இங்கு இயங்கி வந்த நெல் கொள்முதல் நிலையம் காரணமே இல்லாமல்
மூடப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இங்கு தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் அனைத்தும் மழையில் நனைந்து, முளைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் ஈரப்பதம் அதிகரித்து வருவதால் நெல்லை நெல் கொள்முதல் நிலையத்தில் போட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோல் அருகிலுள்ள ஓடாக்கநல்லூர், வெள்ளியக்குடி, பூதங்குடி, சாத்தமங்கலம், வாக்கூர் உள்ளிட்ட பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் இரண்டு லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்து எடுக்கப்படாமல் உள்ளன. நெல் கொள்முதல் நிலையங்களில் முக்கால்வாசிப் பேர் நெல்லை கொட்டி வைத்திருக்கும் நிலையில், பலர் நெடுஞ்சாலைகளில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வீடுகளின் முன்பு பல விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை கடலூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேட்கும்போது அதிகாரிகள் இன்று, நாளை, நாளை மறுநாள் என காலநேரம் சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர நெல்லை எடுக்கவில்லை என விவசாயிகள் கண்ணீரோடு தெரிவிக்கின்றனர்.இதனால் தற்போது சம்பா நடவு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்ட நிலையில் எவ்வித காரணங்களையும் கூறாமல், நிபந்தனையும் விதிக்காமல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் உள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். என அவர்கள் கண்ணீரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment