கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வளையமாதேவி கிராமம்.இக்கிராமத்தில் பெரிய தெருவில் உள்ள ஆலமரம் 400 ஆண்டுகளுக்குமேல் பழமையானது.ஊருக்கு அழகு சேர்க்க பலவிஷங்கள் இருக்கின்றன.வளையமாதேவி கிராமத்திற்கு அழகுசேர்ப்பது இந்த ஆலமரம்தான்.தற்போது வரை யார்வைத்தது என சொல்லதெரியவில்லை என்று கிராமமக்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் இந்த ஆலமரத்தால்,இதனடியில் இருக்கும் மதுரைவீரன் சாமியால் இங்கு வந்து செல்லும் பல கிராமத்தின் மக்களை ஒற்றுமையாக வைத்திருக்கிறது.வெறும் ஆலமரம் என்பதைவிட அதிசயம் நிறைந்த ஆலமரம் என்று கூறுங்கள் என்கின்றனர் .யாரோ ஒரு மனிதரால் வைக்கப்பட்ட ஒரு ஆலமரச்செடியானது இன்று பரந்து விரிந்து பலஆயிரம் விழுதுகள் பரப்பி தனக்கு கீழ் உள்ள மதுரைவீரனை காத்து வருகிறது.கடவுளை மட்டும் காப்பதோடு அல்லாமல் இதனடியில் வந்து அமரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குளிர்ச்சியான நிழலையும் தருகிறது.பல ஊர்களில் சாமிக்கு என்று கோவில் கட்டிடங்களை பார்த்திருக்கிறோம்.இங்கு மட்டும்தான் மதுரை வீரன் சூலத்தில் வடிவமாக குடிகொண்டுள்ளது.
அதனுடன் தனக்கு கட்டிடமாகவும்,குடையாகவும் இந்த ஆலமரத்தை நம்பியிருக்கிறது.மதுரை வீரனின் எண்ணப்படியே அதனை காக்கும்விதமாக ஆலமரம் நெருக்கமாக விழுதுகளை அரணாக பரப்பியிருக்கிறது.விழுதுகள் மண்ணில் விழுந்தவிதத்தையும், அது மேலிருந்து வரும் விதத்தையும் உற்றுநோக்கினால் மிக பிரமிப்பாக இருக்கிறது.இக்கிராமத்தின் சிறுவர்களுக்கு சிறந்த பொழுபோக்கு பொக்கிஷமாக ஆலமரம் இருந்து வருகிறது.பரபரப்பான வாழ்க்கையில் இப்படியொரு இயற்கை சூழ்பொழுபோக்கை கொண்ட இவ்வூர் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்.இங்கு வரும் பல கிராமமக்கள் ஆண்டின் ஏதாவது ஒருநாளில் கிடாவெட்டு விருந்துடன் மதுரைவீரணுக்கு பூஜைபோட்டு வேண்டிக்கொள்கின்றனர்.அவர்கள் வேண்டிக்கொள்வதை அடுத்த ஆண்டிற்குள் நிறைவேற்றி மனமகிழ்ச்சியை பரிசாக தருகிறது மதுரைவீரன் சாமியும், சாமியை காத்துவரும் அதிசய ஆலமரமும்.எத்தனையோ இயற்கை பேரிடர்களை பார்த்துவிட்டது.அவற்றை துச்சமென மதித்து தன்னை கம்பீரமாக நிலை நிறுத்தியிருக்கிறது.இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஆலமரம் அமைந்துள்ள சூழல் ஆரம்ப காலத்தில் எப்படி இருந்ததோ இன்றும் அப்படியேதான் இருக்கிறது.மண்தரை, தரையில் ஆலமரத்தின் காய்ந்த இலைகள், மற்றும் காற்றால் அடித்து வரப்பட்ட சிறு சிறு குப்பைகள் என ஆலமரமுள்ள இடமே சற்று அமானுஷ்யமாக இருக்கிறது.இந்த மரத்தின் அடியில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது என்று கூறுகின்றனர்.ஆனால் அன்று தொட்டு இன்று வரை யாரையும் எவ்விதத்திலும் அவை எவ்விதமான தீங்குகளையும் செய்ததில்லை.முக்கியமாக சிறுவர்கள் இந்த ஆலமரத்தின் விழுதுகளில் ஏறிவிளையாடுகிறார்கள்.பலர் மரத்தின் அடியில் படுத்தும் உறங்குகின்றனர்.பெரியவர்கள் எப்போதுமே வாழ்த்துவார்கள் ஆல மரவிழுதுகள் போல் தழைத்து வளரவேண்டும் என.அதை நேரில் பார்த்து வியப்பதற்கு நீங்கள் இங்கு வரவேண்டும்.அந்தளவுக்கு முதல் மரம் எதுவென்றே தெரியாமல் விழுதுகளால் பின்னப்பட்டு இந்த அதிசய ஆலமரம் உள்ளது.பலர் கிராமத்தின் அழகை மண்வாசம் மிக்க ஊர் என்று சொல்வதை பார்த்திருக்கிறோம்.இங்கு கிராமத்தின் அழகை அதிசய ஆலமரத்தால் மரத்தின் வாசம் மிக்க ஊர் என்று கூறினால் அது நூறு சதம்பொறுத்தமாக இருக்கும்.