கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வெய்யலூர் கிராமம்.இக்கிராமத்தில் நெல்,கரும்பு உள்ளிட்டவை முக்கிய பயிராக விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் இவ்வகை பயிர்களை நீண்டகாலமாக பயிரிட்டு வந்த விவசாயி ராஜேந்திரன் அதில் போதிய வருமானம் இல்லை.கடனும் அதிகரிப்பதைக்கண்டு மாற்று பயிர்செய்வதற்கு முயன்றார்.
அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அரசு வேளாண்மைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சி,கருத்தரங்குகளுக்கு சென்றுவந்தார் விவசாயி ராஜேந்திரன்.இதனுடன் கண்காட்சிகளில் இயற்கை முறையில் பல்வகை பயிர்களை பயிர்செய்துவரும் விவசாயிகளுடன் பழக்கமும் ஏற்பட்டது.இதனடிப்படையில் தனக்கு சொந்தமான வயலில் இயற்கை முறையில் மாற்றுப்பயிர்களை பயிரிட ஆரம்பித்தார்.
முதலில் கத்திரிக்காய் சாகுபடி செய்தார்.அது நன்றாக வந்தது.நல்ல வருமானமும் தந்தது.இவ்வாறு இயற்கை முறையில் விவசாயம் செய்துவரும் இவர் தற்போதும் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளார்.இதில் சற்று மாற்று முயற்சியில் கத்திரிக்காய் செடிகளுக்கு இடையில் இரும்புச்சத்து அதிகமுள்ள சுவை மிகுந்த புளிச்சக்கீரையை ஊடுபயிராக பயிர்செய்துள்ளார்.
ஊடுபயிராக பயிர்செய்துள்ள புளிச்சக்கீரையானது இவருக்கு முழுமையான வருமானம் தந்துக்கொண்டிருக்கிறது.ஆம் தினசரி எளிதாக ஆயிரம் ரூபாய்க்குமேல் வருமானம் தருகிறது புளிச்சக்கீரை.எவ்விதமான மாற்று உரங்கள் பயன்படுத்தாமல் அனைத்து வகையிலும் இயற்கை உரங்களை இவரே தயாரித்து பயன்படுத்தி வருகிறார்.
இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ளதால் புளிச்சக்கீரையானது பார்ப்பதற்கு பச்சை பசேலென்று உள்ளது.எளிதாகவும் விற்பனையாகிறது.முக்கியமாக புளிச்சக்கீரை அதிக இரும்புச்சத்தும், சுவை மிகுந்த கீரையாக இது இருப்பதால் இதனை அனைவருமே விரும்பி உண்கிறார்கள்.
ஆண்டின் அனைத்து நாட்களிலும் விளைந்து, வருமானம் தரக்கூடியது புளிச்சக்கீரை என்று விவசாயி ராஜேந்திரன் கூறினார்.சாதாரணமாக கத்திரி செடிகளுக்கு இடையில்தான் ஊடுபயிராக புளிச்சக்கீரையை பயிரிட்டார்.இப்போது அதிக வருமானம் தரும்பயிராக மாறியுள்ளது புளிச்சக்கீரை.புளிச்சக்கீரையை அறுவடை செய்துவிடும்போது கத்திரிசெடிகள் எவ்விதமான சேதமும் இல்லாமல் விறுவிறுப்பாக வளரஆரம்பிக்கின்றன.
கத்திரிச்செடியிலிருந்து தொடர்ந்து கத்திரிக்காய் வருமானம் தர ஆரம்பிக்கிறது.இயற்கை விவசாயி ராஜேந்திரன் கூறும்போது ஒரே நேரத்தில்,ஒரே வயலில் இரண்டு பயிர்கள் பயிர்செய்ப்பட்டு இரண்டுபயிர்களும் அளவுக்கதிகமான வருமானம் தருகின்றன.இப்போதைய நிலையில் விவசாயிகள் இப்படிப்பட்ட முறையில் பயிர்செய்தால்தான் அவர்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ளமுடியும். எதிர்காலம் மகிழ்ச்சியுள்ளதாகவும் இருக்கும் என்கிறார்.
இவரின் இயற்கை முறையிலான பயிர் சாகுபடி மூலம் சராசரியாக ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.இதனை அனைத்து விவசாயிகளும் தாராளமாக செய்யமுயன்றால் அவர்களும் அதிக வருமானம் பெறலாம் என்றும் வழியும் காட்டுகிறார்.இவர் கத்திரி, புளிச்சக்கீரையை அடுத்து தற்போது இயற்கை முறையில் முருங்கை, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களையும் பயிரிட்டு முயற்சித்தும் வருகிறார்.