கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மழவராயநல்லூர் கிராமம்.இக்கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம்.சாதாரண விவசாயியாக வாழ்ந்து வந்த செல்வம் தனது நண்பரின் தூண்டுதலால் கடந்த எட்டாண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு பாராம்பரிய நெல் ரகத்தை பயிரிட முயற்சித்தார்.அவ்வாறு பயிரிட்ட நெல் ரகமானது சிறப்பாக வளர்ந்தது.நன்றாக விளைச்சலையும் கொடுத்தது. அதன்பேரில் இவருக்கு பாரம்பரிய நெல்ரகங்களைப்பற்றிய ஆர்வம் அதிகளவில் வரஆரம்பித்தது.இவ்வாறான நிலையில் செல்வம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அரசு வேளாண்மை கருத்தரங்கு, இயற்கை வேளாண்¬மை பயிற்சி மற்றும் பல்வேறு விவசாயிகளுடன் இதுப்பற்றிய கலந்துரையாடி தன்னுடைய பாரம்பரிய நெல்லைப்பற்றிய தேடலை வளர்த்துக்கொண்டார்.அப்போதுதான் பாரம்பரிய நெல்லில் ஏகப்பட்ட ரகங்கள் இருப்பதை அறிந்துக்கொண்டார்.
பிறகு அவ்வாறு அவர் அறிந்துக்கொண்ட பாரம்பரிய நெல்ரகங்களை கொஞ்சம்,கொஞ்சம் வாங்கிக்கொண்டு வந்து தன்னுடைய வயலில் பயிரிட ஆரம்பித்தார்.இதில் ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் விவசாயி செல்வத்துக்கு பாரம்பரிய நெல்லைப்பற்றிய தேடல்தான் அதிகம் இருந்ததே தவிர முன்அனுபவம் எதுவும் இல்லை.இந்நிலையில் இவர் ஒன்றுக்குமேற்பட்ட பாரம்பரிய நெல்ரகங்களை தனது வயலில் பரியிட ஆரம்பித்தார்.அதுவும் ஒரே வயலில் இரண்டுக்குமேற்பட்ட பாரம்பரிய நெல்ரகத்தை பயிரிட்டார்.அவ்வாறு பயிரிடப்பட்ட நெல்ரகமானது சிறப்பாக வளர்ந்தது.இப்படி பலவாறு பயிரிட ஆரம்பித்த செல்வம் தற்போது இமயமலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடிய சிங்கார் நெல் முதல் ,இலுப்பைப்பூ சம்பா,வாசனை சீரகசம்பா,சொர்ணமசூரி,ரோஜாபொன்னி,துளசி சம்பா,ஆத்தூர் கிச்சிலி சம்பா,கருப்புகவுனி, வைகறை சம்பா, கருடன் சம்பா, கருங்குறுவை என பதினோரு நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார்.
இந்த நெல் ரகங்கள் அனைத்து நமது மண்பகுதிக்கு சாத்தியமில்லதவை என்றாலும் இயற்கை விவசாயி செல்வம் தனது மாறுபட்ட முயற்சியால் சாதாரணமாக இவற்றை வெற்றிகரமாக விளைவித்து வருகிறார்.தற்போது அவை அனைத்தும் மிக நன்றாக வளர்ந்துள்ளன.
கடந்த எட்டாண்டுகளாக பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிட்டு வரும் செல்வம் கூறும்போது இந்த நெல்ரகங்களின்மேல் தனக்கு ஈர்ப்பு வரக்காரணம் இந்த நெல்ரகங்களை பயிரிடுவது மட்டும் அல்லாமல் இவற்றை முதலில் இவர் உணவாக சாப்பிட்டபோது இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் உடலில் உள்ள ரத்தக்குறைபாடு,கொழுப்புக்கட்டி,தோல்நோய்கள்,தைராய்டு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளை இந்த பாரம்பரிய நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசியால் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டபோது அவை மறைந்துபோயின என்பதால்தான்.தொடர்ந்து தான் பயிரிட்டு வரும் அனைத்து வகை அரிசியையும் தான் சாப்பிட்டு அதனை மற்றவர்க்கும் இவர் பரிந்துரைக்கும்போது பலரும் இவரிடம் பாரம்பரிய அரிசியை கேட்டு வாங்கிச்செல்கின்றனர்.இவ்வாறு தனது வயலில் விளைகின்ற பாரம்பரிய நெல்லை இவரே அரிசியாக்கி விற்பனை செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்.மேலும் இவரிடம் விவசாயிகள் வந்து தானும் பாரம்பரிய நெல்லைபயிரிடப்போகிறேன் என்று கூறினாலும் அவர்களுக்கு இலவசமாகவே விதை நெல்லை தருகிறார். எல்லோரும்தான் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்கள்.அவர்களுக்கெல்லாம் இல்லாத மகத்துவம் இவருக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது? அல்லது இவரால் மட்டும் எப்படி ஒரே நேரத்தில் பதினோரு வகை பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிடமுடிகிறது? இதற்கு செல்வம் ரொம்ப எளிதாகவே பதில் தருகிறார்.
அதாவது பாரம்பரிய நெல்லை பயிரிடும்போது மிக சாதாரணமாகவே இருந்தால்போதும்.பஞ்சகாவ்யா,மீன் அமிலம் ஆகியவற்றை பயன்படுத்தினால் மட்டும்போதும் என்கிறார் செல்வம்.தொடர்ந்து அவர் கூறும்போது பாரம்பரிய நெல்சாகுபடிக்கு தனது வயலில் விளையும் நெல்லின் வைக்கோலை அப்படியே வைத்து உழவு செய்கிறார்.பிறகு,பஞசகாவ்யா? மீன் அமிலம் ஆகியவற்றை மட்டும்தான் பயன்படுத்துகிறார்.அதுபோல் நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறையில் நெல்பயிரிடும் வயலை அப்படியே விட்டுவிடுகிறார்.ஆம் இயற்கை உயிரி சுழற்சி முறையில் நெல்பயிரிடும் வயலை இவர் விடுவதால் வயலில் நன்மை செய்யும் பூச்சியினங்கள் அதிகரிக்கிறது.இவ்வாறு நெல்பயிருக்கு நன்மை செய்யும் அதிகரித்து அவைகள் நெல்லுக்கு தீமை செய்யும் பூச்சியினங்களை பிடித்து உணவாக உட்கொள்வதால் இவருடைய வயலில் பல்வேறு வகையான பாரம்பரிய நெல்ரகத்தை பயிரிடமுடிகிறது என்று அழுத்தமாக கூறுகிறார் செல்வம்.இவரது நெல் வயலில் நண்டு,நத்தை,பாம்பு, நாக்குப்பூச்சி, உள்ளிட்டவைமுதல் பெயர் தெரியாத பல்வேறு பூச்சியினங்கள் இயற்கையாக வளர்ந்து நெல்பயிருக்கு தீமை செய்யும் பூச்சியினங்களை அழித்து பயிர்களை காப்பதால் மிகசாதாரணமாக தன்னால் பாரம்பரிய நெல்ரகத்தை பயிரிடமுடிகிறது.
அதுவும் ஒரே வயலில் இரண்டுக்குமேற்பட்ட பாரம்பரிய நெல்ரகத்தை பயிடுகிறேன் எனவும் செல்வம் கூறுகிறார்.இயறகை முறையில் நெல் பயிரிடுவதால் தனக்கு பொருளாதார செலவு மிச்சம்,ஆட்கள் குறைவு, மண்வளம் மேம்படுதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது என்கிறார். இப்போது இவர் மட்டுமே பதினோரு விதமான பாரம்பரிய நெல்ரகத்தை பயிரிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்று ஏக்கருக்குமேல் பதினோரு பாரம்பரிய நெல்ரகத்தை பயிரிடும் செல்வம் எதிர்காலத்தில் இந்த நெல்ரகங்களை தனித்தனியாக அதிக அளவில் பயிரிட முடிவு செய்துள்ளார்.பாரம்பரிய நெல்ரகங்களை அனைவரும் பயிரிட ஆரம்பித்ததால் அனைவருக்கும் உணவே மருந்தாக நோயற்று வாழமுடியும்.நஞ்சில்லா உணவு அனைவருக்கும் கிடைக்கும் எல்லோரும் பாரம்பரிய நெல்சாகுபடிக்கு மாறிடவேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம்.எந்த விவசாயி என்னை தேடி வந்தாலும் அவர்களுக்கு பாரம்பரிய விதை நெல்லை இலவசமாகவே தர தயாராக இருக்கிறேன் என்று கூறும் செல்வம் மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள்,பல முன்னோடி விவசாயிகளின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்று வருகிறார் அமைதியாக.இவ்வாறு சிறப்பாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவரை அனைவரும் பாராட்டி ஊக்கப்படுத்துவதே சிறப்பாக இருக்கும்.