கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது வெய்யலூர் கிராமம். இக்கிராமத்தைசேர்ந்தவர் ராஜேந்திரன்&ஜெயசித்ரா தம்பதி.இவர்கள் கிராமத்தில் விவசாய வேலைகளை செய்து வருகிறார்கள்.இவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளை, ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள்.இதில் இரண்டாவது பெண்ணான ஹரிணி தனது கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நன்றாக படித்து வரும் மாணவி ஹரிணி வள்ளலார் ப்ற்றி எதுவும் தெரியாமல் அவரைப்பற்றி கேட்டதை மட்டும் வைத்து கடந்த நான்கு -ஆண்டுகளாக சொற்பொழிவு செய்து வருகிறார்.
இதுகுறித்து ஹரிணியின் பெற்றோர் கூறும்போது ஒருநாள் ஹரிணி வள்ளலார் பற்றிய பாடல் சீடியை போட்டு கேட்டு அதற்கேற்றார்போல் நடனமாட ஆரம்பித்தார்.இதைப்பார்த்த நாங்கள் ஹரிணியின் நடனத்திற்கு ஆதரவு கொடுத்தோம்.ஹரிணியிடம் ஒருமுறை எதைக்கேட்டாலும் அப்படியே தொடர்ந்து அதை பாட ஆரம்பிப்பார் வள்ளலார்பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.ஆனால் பலமுறை ஹரிணியை வடலூர் சத்திய ஞானசபை,மேட்டுக்குப்பம்,மருதூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றோம்.
வீட்டில் பாடப்புத்தகத்தை படிக்கும் ஹரிணி.அமைதியான சுபாவம் கொண்டவர்.அதிர்ந்து பேசாதவர்.இப்படிப்பட்ட ஹரிணி இதுவரை வள்ளலார் பற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை செய்துள்ளார்.இவர் பாடும் வள்ளலார் பற்றிய பாடல் சொற்பொழிவுகளைக்கேட்டு பலரும் பாராட்டியும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஹரிணி எப்போது வள்ளலார் பற்றி பாடவும்,நடனமாடவும் ஆரம்பித்ததாரோ அப்போதிலிருந்து ஹரிணியின் குடும்பத்தினர் புலால் உண்ணாமல் சைவ உணவு பழக்கத்திற்கு மாறிவிட்டனர்.இன்னும் சொல்லப்போனால் மாணவி ஹரிணியின் தந்தை ராஜேந்திரன் முன்பு சில ஆண்டுகள் கோழி இறைச்சி வியாபாரம் செய்து வந்துள்ளார்.தனது மகளுக்காக குடும்பத்திலுள்ள அனைவரும் சைவத்துக்கு மாறிவிட்டனர் என்பதை அறிந்து வெய்யலூர் கிராமமே அவர்களை பெருமையாக பார்க்கிறது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பேரூர் கிராமத்தில் வள்ளலார் பற்றிய சொற்பொழிவு செய்யும்போது மாணவி ஹரிணி கூறியது எனக்கு வள்ளலாரைபற்றி நிறைய பாடவேண்டும்,பேசவேண்டும் என்று தானாகவே தோன்றியது.இதற்கு எனது பெற்றோர்கள், எனது சகோதரி,சகோதரன் மற்றும் எனது கிராமத்தினர் என பலரும் பக்க பலமாக இருக்கிறார்கள்.எனக்குள் தோன்றுவதை நான் பாடிவருகிறேன்.இன்னும் நிறைய பாடவேண்டும். படித்துக்கொண்டே வள்ளலார் கூறிய கருத்தை அனைவருக்கும் எடுத்து செல்லவேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.
ஒருமுறை இவர் தனது சொற்பொழிவின்போது விழா ஏற்பாட்டாளர்கள் இவருக்கு அளித்த சன்மானத்தை தன்னைப்போல் படித்து வரும் ஏழை மாணவி ஒருவருக்கு அப்படியே கொடுத்து உதவியதை யாராலும் மறக்கமுடியாத விஷயமாக இவரது ஈகை குணத்தை வெளிக்காட்டும்படி அமைந்தது.
உலக உயிர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யத்தை போதித்த வள்ளலாரைப்பற்றி இளம் வயதில் பள்ளி மாணவி ஹரிணி, அவரைப்பற்றி எதுவும் தெரியாமல் வெறும் கேள்வி ஞானத்தினால் மட்டும் சொற்பொழிவு செய்து வருவது பலரையும் பெருமைப்பட வைத்து வருகிறது.
நமது முன்னோர்கள் கூற்றுப்படி நல்லோர்கள் சிந்தனை எந்தவடிவிலாவது தொடர்ந்து இந்த உலகுக்கு எல்லாக்காலத்திலும் வழிகாட்டிக்கொண்டிருக்கும் என்பது இதன்மூலம் உண்மையாகி வருகிறது.