கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் வெள்ளாறு செல்கிறது.இங்குள்ள வெள்ளாற்றில் கடந்த இருபதாண்டுகளுக்குமேலாக இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது.இதனால் ஆற்றின் தூய்மை பாதிக்கப்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில்தான் கொட்டப்பட்டு வருகின்றன.இந்த இறைச்சிக்கழிவுகள் திறந்த வெளியில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் இதனால் ஆற்றின் தூய்மை பாதிப்படைந்துள்ளது.இதனோடு மட்டும் அல்லாமல் இந்த இறைச்சிக்கழிவினால் ஏற்படும் துர்நாற்றம் அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள், வாகன ஒட்டிகள், அருகிலுள்ள குடியிருப்புக்கள் போன்றவற்றையும் விட்டுவைக்கவில்லை.இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையிலும் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள்.மேலும் இந்த இறைச்சிக்கழிவுகளோடு ஆற்றில் கழிவறை நீரும் கலந்து வருவதால் ஆற்றின் தூய்மை பாதிப்படைவதோடு ஆற்றின் நிலத்தடி நீர்மட்டமும் கெட்டுப்போகிறது.
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் ஏற்பட்டுள்ள இறைச்சிக்கழிவு, கழிவறை நீர் கலப்பதோடு மட்டும் அல்லாமல் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள செப்டிக்டேங்க் கிளனீங் செய்துவரும் சிலரும் ஆற்றில் அதனை தொடர்ந்து கொட்டிவருதால் வெள்ளாற்றுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பாதிப்பானது வெள்ளாற்றிலிருந்து சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு குடிநீர்விநியோகிக்கும் போர்வெல்லையும் பாதித்து அதனால் பெருந்தொல்லைகள் ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என இப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கிறார்கள்.அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆற்றின் தூய்மையை காப்பதற்கு முன்வரவேண்டும் என்பதே அனைவரின்கோரிக்கையாக உள்ளது.