உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, December 26, 2018

சேத்தியாத்தோப்பில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவிக்கும் பொறியியல் பட்டதாரி


சேத்தியாத்தோப்பில் பாரம்பரிய நெல்ரகங்களை இயற்கை முறையில் விளைவிக்கும் பொறியியல் பட்டதாரி.
கடலூர் மாவட்டம்  புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பு சந்தைதோப்பு பகுதியைச்சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி குலோத்துங்கன்.இவர் தனது வயலில் வழக்கமான விவசாயம் செய்துவந்தார்.ஒருக்கட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் உப்புநீரானதால்  பலவிதமான பரிசோதனைகள் செய்து பார்த்தும் இவரால் தண்ணீரை சரிசெய்ய முடியவில்லை.இதன் அருகில் சில கிலோமீட்டரில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கப்பணிகள் நடைபெற்றுவருவதால் அதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோய்,கிடைக்கும் சொற்ப நீரும் உவர்ப்பாகவும் விவசாயத்திற்கு லாய்க்கற்றதாகவும் இருந்தது.
ஏற்கெனவே நஷ்டத்தில் விவசாயம் செய்துவந்த இவருக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசனையில்  இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்,நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் பேச்சுக்கள் கேட்டும்,புத்தகங்களையும் படித்தும்  வந்தார்.பல பகுதிகளுக்கும் சென்று இயற்கை முறையில் நடைபெறும் அனைத்து விவசாய சாகுபடி வயல்களையும்,விவசாயிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்கள்,ஆலோசனைகள் பலவற்றை அனுபவமாக பெற்றார்.இது மட்டும் அல்லாமல் பலவிதமான இயற்கை வேளாண் கண்காட்சிகள்,முகாம்கள்,பயிற்சிகள் போன்றவற்றிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.அவ்வாறான நிலையில் எவ்விதமான ரசாயண உரங்களும் இல்லாமல் நமது பாரம்பரிய நெல்ரகங்களை விளைவிக்க முடியும்.அவ்வாறு விளையும் நெல்லில் சமைக்கப்படும் அரிசி உணவானது மிகுந்த சக்திகொண்டதாகவும்,நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும்,மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் என்றும் நன்கு தெரிந்துகொண்டார் விவசாயி குலோத்துங்கன்.இதனையடுத்து இயற்கை முறையில் எந்தவிதமான பாரம்பர்ய நெல் ரகங்களை பயிரிடலாம் என்று முடிவு செய்து உடனடியாக தனது வயலில் ஒரு ஏக்கருக்கும் குறைவான அளவில் பாரம்பரிய நெல்ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம்,குள்ளக்கார்,ஆத்தூர்கிச்சிலி சம்பா,சீரகசம்பா போன்ற நெல்ரகங்களை இயற்கை உரத்தை பயன்படுத்தி முதலில் விளைவித்தார். அவ்வாறு விளைவித்த அனைத்து நெல்ரகங்களும் நன்றாக விளைந்தன.மேலும் நோய்தாக்காமல் நெற்பயிர்கள் வளர்ந்திருந்தன.ஒவ்வொரு நெல் கதிரும்.நான்கடி முதல் ஐந்தடிக்குமேலும் வளர்ந்திருந்தன. இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது இயற்கையின் சுழற்சி அடிப்படையில் நமது மூதாதையர்கள் அதன் உதவியோடும் முன்பு விவசாயம் செய்து வந்தனர். அதனால் அவர்கள் பயிர்செய்த அனைத்தும் சக்தி நிறைந்ததாகவும்,நோய்தீர்க்கும் உணவாகவும் இருந்தது.அதுபோல் இன்று அவர்களின் வழியில் இயற்கை முறையில் ரசாயண உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கையாக உரங்களை நானே தயாரித்து எனது வயலில் நெல் பயிரிடுகிறேன்.இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பதோடு,இயற்கை உயிரின சுழற்சி இயல்பாக நடைபெற்று மண்ணின் அமிலத்தன்மை மாறி இயற்கையாக வயலில் தற்போது கிடைப்பதற்கு அறிய ரகமாக இருக்கும் பாரம்பர்ய நெல் ரகங்களை பயிரிடமுடிகிறது.மேலும் எனது வயலில் விளைந்த நெல்லை சாப்பாட்டுக்கும்,மற்றும் விதை நெல்லாகவும் வைத்துக்கொண்டு தொடர்ந்து பாரம்பரிய நெல்பயிரிடும்  பரப்பை அதிகரித்துக்கொண்டு இப்போது இருபது ஏக்கரில் மேற்கண்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறேன்.என்னிடம் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு விதை நெல் வாங்க வருபவர்களிடம் செயற்கை ரசாயண உரங்களை பயன்படுத்தமாட்டேன் என்று சத்தியம் செய்தால்தான் விதை நெல்லே தருகிறேன். மேலும் வருங்காலங்களில் எனது வயலில் விளையும் நெல்லை இயற்கை முறையில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவுள்ளேன்.தற்போது நெல்லைப்போல் மற்ற அனைத்து வகையான பயிர்களையும் இதே முறையில் பயிரிட முயற்சித்து வருகிறேன்.இப்போதுள்ள எல்லா விவசாயிகளும் சிறிய அளவில் இதுபோன்ற முயற்சிகளை எடுத்தால் வருங்காத்தில் இயற்கை முறையிலான விவசாயம் அதிகமாகும்.நஞ்சில்லா உணவும் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அவர்கூறினார்.